சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

11.036   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை

-
திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்குங்
கங்கைப் பேரியாற்றுக் கடுவரற் கலுழியின்
இதழியின் மெம்பொ னிருகரை சிதறிப்
புதலெருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன்
திருவருள் பெற்ற இருபிறப் பாளன்

முத்தீ வேள்வு நான்மறை வளர
ஐவேள் வுயர்த்த அறுதொழி லாளன்
ஏழிசை யாழை யெண்டிசை யறியத்
துண்டப் படுத்த தண்டமிழ் விரகன்
காழி நாடன் கவுணியர் தலைவன்

மாழை நோக்கி மலைமகள் புதல்வன்
திருந்திய பாடல் விரும்பினர்க் கல்லது
கடுந்துய ருட்புகக் கைவிளிக் கும்இந்
நெடும்பிற விக்கடல் நீந்துவ தரிதே.


[ 1]


அரியோடு நான்முகத்தோ னாதிசுரர்க் கெல்லாந்
தெரியாமைச் செந்தழலாய் நின்ற வொருவன்சீர்
தன்தலையின் மேல்தரித்த சம்பந்தன் தாளிணைகள்
என்தலையின் மேலிருக்க வென்று.


[ 2]


என்று மடியவ ருள்ளத்
திருப்பன விவ்வுலகோர்
நன்று மலர்கொடு தூவித்
துதிப்பன நல்லசங்கத்
தொன்றும் புலவர்கள் யாப்புக்
குரியன வொண்கலியைப்
பொன்றுங் கவுணியன் சைவ
சிகாமணி பொன்னடியே.


[ 3]


அடுசினக் கடகரி யாதுபடி உரித்த
படர்சடைக் கடவுள்தன் திருவரு ளாதனால்
பிறந்தது
கழுமலம் என்னும் கடிநக ரதுவே
வளர்ந்தது 5
தேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறு
பூங்குழல் மாதிடு போனகம் உண்டே
பெற்றது
குழகனைப் பாடிக் கோலக்காப்புக்
கழகுடைச் செம்பொன் தாளம் அவையே 10
தீர்த்தது
தாதமர் மருகற் சடையனைப் பாடிப்
பேதுறு பெண்ணின் கணவனை விடமே
அடைத்த
தரசோ டிசையா அணிமறைக் காட்டுக் 15
குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே
ஏறிற்
றத்தியும் மாவும் தவிர அரத்துறை
முத்தின் சிவிகை முன்னாட் பெற்றே
பாடிற் 20
றருமறை ஒத்தூர் ஆண்பனை யதனைப்
பெருநிறம் எய்தும் பெண்பனை யாவே
கொண்டது
பூவிடு மதுவில் பொறிவண் டுழலும்
ஆவடு துறையிற் பொன்ஆ யிரமே 25
கண்டது
உறியோடுபீலி யொருகையிற் கொள்ளும்
பறிதலைச் சமணைப் பலகழு மிசையே
நீத்த
தவிழ்ச்சுவை யேஅறிந் தரனடி பரவும் 30
தமிழ்ச்சுவை யறியாத் தம்பங் களையே
நினைந்த
தள்ளற் பழனக் கொள்ளம் பூதூர்
இக்கரை ஓடம் அக்கரைச் செலவே
மிக்கவர் 35
ஊனசம் பந்தம் அறுத்துயக் கொளவல
ஞானசம் பந்தனிந் நானிலத் திடையே. 37


[ 4]


நிலத்துக்கு மேலாறு நீடுலகத் துச்சித்
தலத்துக் மேலேதா னென்பர் சொலத்தக்க
சுத்தர்கள் சேர்காழிச் சுரன்ஞான சம்பந்தன்
பத்தர்கள்போய் வாழும் பதி.


[ 5]


Go to top
பதிகம் பலபாடி நீடிய
பிள்ளை பரசுதரற்கு
அதிக மணுக்க னமணர்க்குக்
காலன் அவதரித்த
மதியந் தவழ்மாட மாளிகைக்
காழியென் றால்வணங்கார்
ஒதியம் பணைபோல் விழுவரந்
தோசில வூமர்களே.


[ 6]


தவள மாளிகைத் திவளும் யானையின்
கவுள்தலைக் கும்பத்
தும்பர் பதணத் தம்புதந் திளைக்கும்
பெருவளம் தழீஇத் திருவளர் புகலி
விளங்கப் பிறந்த வளங்கொள் சம்பந்தன்
கருதியஞ் செவ்விச் சுருதியஞ் சிலம்பில்
தேமரு தினைவளர் காமரு புனத்து
மும்மதஞ் சொரியும் வெம்முகக் கைம்மா
மூரி மருப்பின் சீரிய முத்துக்
கொடுஞ்சிலை வளைத்தே கொடுஞ்சரந் துரந்து

முற்பட வந்து முயன்றங் குதவிசெய்
வெற்பனுக் கல்லது
சுணங்கணி மென்முலைச் சுரிகுழல் மாதினை
மணஞ்செய மதிப்பது நமக்குவன் பழியே.


[ 7]


பழியொன்றும் ஓராதே பாயிடுக்கி வாளா
கழியுஞ் சமண்கையர் தம்மை யழியத்
துரந்தரங்கச் செற்றான் சுரும்பரற்றும் பாதம்
நிரதந்தரம்போய் நெஞ்சே நினை.


[ 8]


நினையா தரவெய்தி மேகலை
நெக்கு வளைசரிவாள்
தனையாவ வென்றின் றருளுதி
யேதடஞ் சாலிவயல்
கனையா வருமேதி கன்றுக்
கிரங்கித்தன் காழ்வழிபால்
நனையா வருங்காழி மேவிய
சீர்ஞான சம்பந்தனே.


[ 9]


தனமலி கமலத் திருவெனுஞ் செல்வி
விருப்பொடு திளைக்கும் வீயா வின்பத்
தாடக மாடம் நீடுதென் புகலிக்
காமரு கவினார் கவுணியர் தலைவ
பொற்பமர் தோள நற்றமிழ் விரக

மலைமகள் புதல்வ கலைபயில் நாவநினாது
பொங்கொளி மார்பில் தங்கிய திருநீ
றாதரித் திறைஞ்சிய பேதையர் கையில்
வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின்
பிள்ளை யாவது தெரிந்தது பிறர்க்கே.


[ 10]


Go to top
பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவியெனுந் தொஃறோணி கண்டீர் நிறையுலகில்
பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.


[ 11]


ஞானந் திரளையி லேயுண்
டனையென்று நாடறியச்
சோனந் தருகுழ லார்சொல்
லிடாமுன் சுரும்புகட்குப்
பானந் தருபங்க யத்தார்
கொடுபடைச் சால்வழியே
கூனந் துருள்வயல் சூழ்காழி
மேவிய கொற்றவனே.


[ 12]


அவனிதலம் நெரிய வெதிரெதிர் மலைஇச்
சொரிமதக் கறிற்று மத்தகம் போழ்ந்து
செஞ்சே றாடிச் செல்வன அரியே எஞ்சாப்
படவர வுச்சிப் பருமணி பிதுங்கப்
பிடரிடைப் பாய்வன பேழ்வாய்ப் புலியே
இடையிடைச் செறியிரு ளுருவச் சேண்விசும் பதனில்
பொறியென விழுவன பொங்கொளி மின்னே
உறுசின வரையா லுந்திய கலுழிக்
கரையா றுழல்வன கரடியின் கணனே
நிரையார் பொருகட லுதைந்த சுரிமுகச் சங்கு

செங்கயல் கிழித்த பங்கய மலரின்
செம்மடல் நிறைய வெண்முத் துதிர்க்கும்
பழனக் கழனிக் கழுமல நாடன்
வைகையி லமணரை வாதுசெய் தறுத்த
சைவ சிகாமணி சம்பந்தன் வெற்பிற்

சிறுகிடை யவள்தன் பெருமுலை புணர்வான்
நெறியினில் வரலொழி நீமலை யோனே.


[ 13]


மலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்தும்
முலைத்தடங்கள் நீத்தாலும் மூப்பர் கலைத்தலைவன்
சம்பந்தற் காளாய்த் தடங்காழி கைகூப்பித்
தம்பந்தந் தீராதார் தாம்.


[ 14]


தாமரை மாதவி சேறிய
நான்முகன் தன்பதிபோல்
காமரு சீர்வளர் காழிநன்
னாடன் கவித்திறத்து
நாமரு வாதவர் போல்அழ
கீந்துநல் வில்லிபின்னே
நீர்மரு வாத சுரத் தெங்ங
னேகுமென் நேரிழையே.


[ 15]


Go to top
இழைகெழு மென்முலை யிதழிமென் மலர்கொயத்
தழைவர வொசித்த தடம்பொழி லிதுவே காமர்
கனைகுடைந் தேறித் துகிலது புனையநின்
றெனையுங் கண்டு வெள்கிட மிதுவே தினைதொறும்
பாய்கிளி யிரியப் பையவந் தேறி

ஆயவென் றிருக்கும் அணிப்பரண் இதுவே ஈதே
இன்புறு சிறுசொ லவைபல வியற்றி
அன்பு செய் தென்னை யாட்கொளு மிடமே பொன்புரை
தடமலர்க் கமலக் குடுமியி லிருந்து
நற்றொழில் புரியும் நான்முகன் நாட்டைப்

புற்கடை கழீஇப் பொங்கு சராவத்து
நெய்த்துடுப் பெடுத்த மூத்தீப் புகையால்
நாள்தொறும் மறைக்குஞ் சேடுறு காழி
எண்டிசை நிறைந்த தண்டமிழ் விரகன்
நலங்கலந் தோங்கும் விலங்கலின் மாட்டுப்

பூம்புன மதனிற் காம்பன தோளி
பஞ்சில் திருந்தடி நோவப் போய்எனை
வஞ்சித் திருந்த மணியறை யிதுவே.


[ 16]


வேழங்க ளெய்பவர்க்கு வில்லாவ திக்காலம்
ஆழங் கடல்முத்தம் வந்தலைக்கும் நீள்வயல்சூழ்
வாயந்ததிவண் மாட மதிற்காழிக் கோன்சிலம்பிற்
சாய்ந்தது வண்தழையோ தான்.


[ 17]


தழைக்கின்ற சீர்மிகு ஞானசம்
பந்தன் தடமலைவாய்
அழைக்கின்ற மஞ்சைக் கலர்ந்தன
கோடலம் பெய்திடுவான்
இழைக்கின்ற தந்தரத் திந்திர
சாபம்நின் னெண்ணமொன்றும்
பிழைக்கின்ற தில்லைநற் றேர்வந்து
தோன்றிற்றுப் பெய்வளையே.


[ 18]


வளைகால் மந்தி மாமரப் பொந்தில்
விளைதே னுண்டு வேணுவின் துணியால்
பாறை யில்துயில் பனைக்கை வேழத்தை
உந்தி யெழுப்பு மந்தண் சிலம்ப அஃதிங்கு
என்னைய ரிங்கு வருவர் பலரே
அன்னை காணி லலர்தூற் றும்மே பொன்னார்
சிறுபரற் கரந்த விளிகுரற் கிங்கிணி
சேவடி புல்லிச் சில்குர லியற்றி
அமுதுண் செவ்வா யருவி தூங்கத்
தாளம் பிரியாத் தடக்கை யசைத்துச்
சிறுகூத் தியற்றிச் சிவனருள் பெற்ற
நற்றமிழ் விரகன் பற்றலர் போல
இடுங்கிய மனத்தொடு மொடுங்கிய சென்று
பருதியுங் குடகடல் பாய்ந்தனன்
கருதிநிற் பதுபிழை கங்குலிப் புனத்தே.


[ 19]


தேம்புனமே யுன்னைத் திரிந்து தொழுகின்றேன்
வாம்புகழ்சேர் சம்பந்தன் மாற்றலர்போல் தேம்பி
அழுதகன்றா ளென்னா தணிமலையர் வந்தால்
தொழுதகன்றா ளென்றுநீ சொல்.


[ 20]


Go to top
சொற்செறி நீள்கவி செய்தன்று
வைகையில் தொல்லமணர்
பற்செறி யாவண்ணங் காத்தசம்
பந்தன் பயில்சிலம்பில்
கற்செறி வார்சுனை நீர்குடைந்
தாடுங் கனங்குழையை
இற்செறி யாவண்ணம் காத்திலை
வாழி யிரும்புனமே.


[ 21]


புனலற வறந்த புன்முளி சுரத்துச்
சினமலி வேடர் செஞ்சர முரீஇப்
படுகலைக் குளம்பின் முடுகு நாற்றத்
தாடு மரவி னகடு தீயப்
பாடு தகையின் பஞ்சுரங் கேட்டுக்

கள்ளியங் கவட்டிடைப் பள்ளி கொள்ளும்
பொறிவரிப் புறவே யுறவலை காண்நீ நறைகமழ்
தேம்புனல் வாவித் திருக்கழு மலத்துப்
பையர வசைத்ததெய்வ நாயகன்
தன்னருள் பெற்ற பொன்னணிக் குன்றம்

மானசம் பந்தம் மண்மிசைத் துறந்த
ஞானசம் பந்தனை நயவார் கிளைபோல்
வினையே னிருக்கும் மனைபிரி யாத
வஞ்சி மருங்கு லஞ்சொற் கிள்ளை
ஏதிலன் பின்செல விலக்கா தொழிந்தனை

ஆதலின் புறவே யுறவறலை நீயே


[ 22]


அலைகடலின் மீதோடி யந்நுளையர் வீசும்
வலைகடலில் வந்தேறு சங்கம் அலர்கடலை
வெண்முத் தவிழ்வயல்சூழ் வீங்குபுனற் காழியே
ஒண்முத் தமிழ்பயந்தா னூர்.


[ 23]


ஊரும் பசும்புர வித்தே
ரொளித்த தொளிவிசும்பில்
கூரு மிருளொடு கோழிகண்
தூஞ்சா கொடுவினையேற்
காரு முணர்ந்திலர் ஞானசம்
பந்தனந் தாமரையின்
தாருந் தருகில னெங்ஙனம்
யான்சங்கு தாங்குவதே.


[ 24]


தேமலி கமலப் பூமலி படப்பைத்
தலைமுக டேறி யிளவெயிற் காயும்
கவடிச் சிறுகாற் கர்க்ட கத்தைச்
சுவடிச் சியங்கும் சூல்நரி முதுகைத்
துன்னி யெழுந்து செந்நெல் மோதுங்

காழி நாட்டுக் கவுணியர் குலத்தை
வாழத் தோன்றிய வண்டமிழ் விரகன்
தெண்டிரைக் கடல்வாய்க்
காண்தகு செவ்விக் களிறுக ளுகுத்த
முட்டைமுன் கவரும் பெட்டையங் குருகே

வாடை யடிப்ப வைகறைப் போதில்
தனிநீ போந்து பனிநீர் ஒழுகக்
கூசிக் குளிர்ந்து பேசா திருந்து
மேனி வெளுத்த காரண முரையாய்
இங்குத் தணந்தெய்தி நுமரும்

இன்னம்வந் திலரோ சொல்லிளங் குருகே.


[ 25]


Go to top
குருகும் பணிலமுங் கூன்நந்துஞ் சேலும்
பெருகும் வயற்காழிப் பிள்ளை யருகந்தர்
முன்கலங்க நட்ட முடைகெழுமுமால் இன்னம்
புன்கலங்கள் வைகைப் புனல்.


[ 26]


புனமா மயில் சாயல் கண்டுமுன்
போகா கிளிபிரியா
இனமான் விழியொக்கும் மென்றுவிட்
டேகா விருநிலத்துக்
கனமா மதிற்காழி ஞானசம்
பந்தன் கடல்மலைவாய்த்
தினைமா திவள்காக்க வெங்கே
விளையுஞ் செழுங்கதிரே.


[ 27]


கதிர்மதி நுழையும் படர்சடை மகுடத்
தொருத்தியைக் கரந்த விருத்தனைப் பாடி
முத்தின் சிவிகை முன்னாட் பெற்ற
அத்தன் காழி நாட்டுறை யணங்கோ மொய்த்தெழு
தாமரை யல்லித் தவிசிடை வளர்ந்த
காமரு செல்வக் கனங்குழை யவளோ மீமருத்
தருவளர் விசும்பில் தவநெறி கலக்கும்
உருவளர் கொங்கை யுருப்பசி தானோ
வாருணக் கொம்போ மதனன் கொடியோ
ஆரணி யத்து ளருந்தெய்வ மதுவோ

வண்டமர் குழலும் கெண்டையங் கண்ணும்
வஞ்சி மருங்குங் கிஞ்சுக வாயும்
ஏந்திள முலையுங் காந்தளங் கையும்
ஒவியர் தங்க லொண்மதி காட்டும்
வட்டிகைப் பலகை வான்துகி லிகையால்

இயக்குதற் கரியதோர் உருவுகண் டென்னை
மயக்கவந் துதித்ததோர் வடிவிது தானே.


[ 28]


வடிக்கண்ணி யாளையிவ் வான்சுரத்தி னூடே
கடிக்கண்ணி யானோடும் கண்டோம் வடிக்கண்ணி
மாம்பொழில்சேர் வைகை யமண்மலைந்தான் வண்காழிப்
பூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு
.


[ 29]


குருந்தும் தரளமும் போல்வண்ண
வெண்ணகைக் கொய்மலராள்
பொருந்தும் திரள்புயத் தண்ணல்சம்
பந்தன்பொற் றாமரைக்கா
வருந்தும் திரள்கொங்கை மங்கையை
வாட்டினை வானகத்தே
திருந்துந் திரள்முகில் முந்திவந்
தேறுதிங் கட்கொழுந்தே.


[ 30]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song